உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஊராட்சிகளில் ஒதுக்கப்பட்ட ரூ.42 கோடி வீண்...கண்துடைப்பு:குளத்திற்கு பதிலாக பள்ளம் தோண்டிய அவலம்

ஊராட்சிகளில் ஒதுக்கப்பட்ட ரூ.42 கோடி வீண்...கண்துடைப்பு:குளத்திற்கு பதிலாக பள்ளம் தோண்டிய அவலம்

திருவாலங்காடு:மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சி துறை வாயிலாக குளம் அமைக்க, 42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இப்பணியை 100 நாள் பணியாளர் செய்த நிலையில், பொழுதுபோக்குக்காக பள்ளம் வெட்டியது போன்று உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி, திருவாலங்காடு, திருவள்ளூர், கடம்பத்தூர், எல்லாபுரம், பூண்டி, சோழவரம், புழல், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், வில்லிவாக்கம், பூந்தமல்லி உட்பட 14 ஒன்றியங்களில், 526 ஊராட்சிகள் உள்ளன.மாவட்டம் முழுதும் உள்ள ஊராட்சிகளில் நீர்வளத்தை பெருக்கவும், நீர் தேக்கி வைக்கும் வகையில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் புது குளம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, 30 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலத்தில், 900 சதுர மீட்டர் அளவில், 5 அடி ஆழத்திற்கு குளம் அமைக்கப்பட வேண்டும்.இதற்காக, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதி, தலா 8.10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதன்படி, மாவட்டம் முழுதும் உள்ள 526 ஊராட்சிகளுக்கு, 42 கோடியே 60 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இப்பணியை, நூறு நாள் பணியாளர்களை வைத்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.தற்போது, மாவட்டம் முழுதும் பணி முடிந்த நிலையில், 95 சதவீத ஊராட்சிகளில் பணி அரைகுறையாகவே நடந்துள்ளது. ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்த இப்பணி, குழந்தைகள் விளையாட பள்ளம் வெட்டியது போன்று உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:கிராமங்களில் குளம் வெட்டுவதன் வாயிலாக, நிலத்தடி நீர்மட்டம் உயரும். கால்நடைகள் மற்றும் விவசாயிகள் அதை பயன்படுத்துவர் என்ற நோக்கத்தில் இப்பணி நடந்தது. ஆனால், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், இப்பணி சரியான அளவில் செய்யப்படவில்லை.குளம் வெட்டுவதற்கு பதிலாக, பள்ளம் தோன்றியது போல உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால், அவர்கள் கண்டுகொள்வதில்லை.மாறாக, நூறு நாள் பணியாளர் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைத்ததும், பணிதள பொறுப்பாளர் வாயிலாக பணத்தை பெறும் ஊராட்சி நிர்வாகிகள், பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகளுடன் இணைந்து பிரித்து எடுத்துக் கொள்கின்றனர். இந்த 'டெக்னிக்' மாவட்டம் மட்டுமின்றி, மாநிலம் முழுதும் உள்ளது.குளம் வெட்டும் பணியை களத்தில் சென்று ஆய்வு செய்யாமல், அலுவலகத்தில் அமர்ந்தபடி கையொப்பமிடும் உயரதிகாரிகளின் போக்கே, இதற்கு முக்கிய காரணம்.ஊரக வளர்ச்சி துறை வாயிலாக நடைபெறும் பெரும்பாலான பணி கண்துடைப்பாகவே நடந்து வருகிறது. மத்திய - மாநில அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் பிரதாப் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

திருவள்ளூர் மாவட்டத்தில் குளம் வெட்டும் பணி குறித்து சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளிடம் கேட்டும், நேரில் ஆய்வு செய்தும் நடவடிக்கை எடுக்கப்படும்.- ஊரக வளர்ச்சி துறை அதிகாரி,திருவள்ளூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஏப் 03, 2025 03:40

இந்த லட்சனத்தில் ஊரக பணிக்கு மத்திய அரசு நிதி விடுவிக்க வில்லை, தமிழகத்தை மாற்றாந்தாயாக நினைக்கிறது என்று ஸ்டாலின் அவர்கள் புலம்புகிறார்..... பணிகள் சரிவர செய்வதில்லை ஆனால் கொள்ளையடிக்க பணம் மட்டும் கொடுக்க வேண்டும்.....!!!


Dhasarathan Dharuman
ஏப் 02, 2025 22:12

நடவடிக்கை எடுத்து பாருங்க ? பாக்கலாம்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை