மேலும் செய்திகள்
உயர் உரக்கலவை கரைசல் காய்கறி சாகுபடிக்கு உகந்தது
15-Sep-2025
திருவள்ளூர்;திருவள்ளூர் மாவட்ட தோட்டக்கலை சார்பில், உரக்கலவை கலந்த செம்மண் மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை சார்பில், ஈக்காடு வட்டம் ஈக்காடுகண்டிகையில், அரசு தோட்டக்கலை பண்ணை அமைக்கப்பட்டது. இந்த பண்ணையில் மிளகாய், கத்தரி குழித்தட்டு நாற்றுகள், எழுமிச்சை போன்ற பழச்செடிகள், பூச்செடிகள், மருத்துவம் மற்றும் அலங்கார செடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றை, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தோட்டக்கலை துறை வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்களில், அரசு மானியத்தில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மக்களுக்கு நேரடியாகவும் செடி நாற்றுகள் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது, உரக்கலவை கலந்த செம்மண் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து, தோட்டக்கலை துறை அலுவலர் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் தவிர மக்களும் மாடி தோட்டம், வீடுகளில் தோட்டம் அமைத்து வருகின்றனர். அவர்களுக்கு செடிகள் வளர்க்க தேவையான மண் கிடைப்பதில்லை. இதையடுத்து, தோட்டக்கலை பண்ணையில் மக்கிய தொழு உரம், மக்கிய தேங்காய் நார் பஞ்சு கலந்த செம்மண் உரக்கலவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது பண்ணையில், 2,000 செம்மண் மூட்டை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மூட்டையும், 15 கிலோ எடை கொண்டவை. மூட்டை ஒன்று, 300 ரூபாய். மக்கள் மற்றும் மாடி தோட்டம் அமைப்போர், 50 சதவீத மானிய விலையில், 150 ரூபாய் மட்டும் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
15-Sep-2025