| ADDED : நவ 20, 2025 03:51 AM
மீஞ்சூர்: மீஞ்சூர் பேரூராட்சியில், கால்வாயில் உள்ள கழிவுகளை பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல், துாய்மை பணியாளர்கள் கைகளில் அள்ளும் அவலநிலையை கண்டு, சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில், அவ்வப்போது அடைப்பு ஏற்படுவதும், அதை துாய்மை பணியாளர்களை கொண்டு சீரமைப்பதும் வழக்கம். நேற்று, பஜார் பகுதியில் உள்ள கால்வாயில் துாய்மை பணியாளர்கள் எந்தவொரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர். கையுறை, முக கவசம் ஏதும் இல்லாமல், கால்வாயில் தேங்கியிருந்த கழிவுகளை அள்ளி, வெளியில் எடுத்தனர். இது, சமூக ஆர்வலர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: உணவகங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கால்வாயில் குவியும்போது, அடைப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து, பேரூராட்சி நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல், பணியாளர்கள் கழிவுகளை அகற்றுகின்றனர். பல்வேறு சம்பவங்களில், விஷ வாயு தாக்கி அசம்பாவிதங்கள் நடைபெறுகிறது. அவ்வாறு இருந்தும், பேரூராட்சி நிர்வாகம் துாய்மை பணியாளர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. எனவே, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.