உப்பளத்தில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி
பொன்னேரி : மீஞ்சூர் ஒன்றியம், கூடுவாஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட உப்பளம் கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.கடந்த ஆண்டு, இங்கிருந்த பழைய பள்ளி கட்டடம் ஒன்றை இடித்துவிட்டு, குழந்தைநேய பள்ளி மேம்பாட்டு உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், 28 லட்சம் ரூபாயில், இரண்டு வகுப்பறை கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டது.கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்கு வசதியாக பள்ளியின் முகப்பில் இருந்த சுற்றுச்சுவர், 30 மீ., நீளத்திற்கு இடிக்கப்பட்டது.கட்டடம் பயன்பாட்டிற்கு வந்து, ஆறு மாதங்கள் ஆன நிலையில், இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர் மீண்டும் கட்டாமல் அப்படியே போடப்பட்டு உள்ளது.இதனால் பகல் நேரங்களில் கால்நடைகளின் வசிப்பிடமாகவும், இரவு நேரங்களில் குடிகாரர்களின் குடிமையமாகவும் பள்ளி வளாகம் மாறி உள்ளது.விடுமுறை நாட்களில் தனியார் வாகனங்களும் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. சாலையை ஒட்டி பள்ளி வளாகம் இருப்பதால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.இடிக்கப்பட்ட பகுதியில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.