உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் தொடர் திருட்டு 2 மாதத்தில் 40 டூ - வீலர்கள் மாயம்

திருத்தணியில் தொடர் திருட்டு 2 மாதத்தில் 40 டூ - வீலர்கள் மாயம்

திருத்தணி,:திருத்தணி போலீஸ் நிலைய எல்லைக்குள் திருத்தணி நகரம் மற்றும், 98 கிராமங்கள் உள்ளன. இந்த போலீஸ் நிலையத்தில் சட்டம்- ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு என இரு பிரிவுகள் உள்ளன. இந்த இரண்டு பிரிவுகளுக்கும் தனித்தனி இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு வரை இருந்தனர். இதனால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை மற்றும் திருட்டு, வழிப்பறி வழக்குகள் அந்தந்த பிரிவு போலீசார் கண்காணித்து வந்தனர்.இந்நிலையில், கடந்த ஒராண்டுக்கு மேலாக திருத்தணி போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உள்பட ஒரு போலீசாரும் இல்லை. இதற்கு பதிலாக சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., ஆகியோர் குற்றப்பிரிவு சேர்த்தும் கவனித்து வருகின்றனர். ஏற்கனவே சட்டம்- ஒழுங்கு பிரிவில் போலீசார் மற்றும் எஸ்.ஐ.,க்கள் பற்றாக்குறை உள்ளதால், திருத்தணி பகுதியில் அதிகளவில் குற்றச்சம்பவங்கள் நடந்து வருகிறது.உதாரணமாக சில மாதங்களாக திருத்தணி நகரம் மற்றும் கிராமங்களில், வீடுகள் முன் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் மர்ம நபர்களால் அதிகளவில் திருடப்படுகிறது. இரு சக்கர வாகனங்கள் திருடுவது 'சிசிடிவி' பதிவுகளுடன் புகார் கொடுத்தாலும் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.ஒரு நாளைக்கு, குறைந்த பட்சம் ஒரு இரு சக்கர வாகனமானது, திருத்தணி போலீஸ் எல்லைக்குள் மர்ம நபர்களால் திருடப்படுகிறது. கடந்த இரு மாதத்தில் மட்டும், 40க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளன. இதனால், இரு சக்கர வாகன உரிமையாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் வாகனங்கள் மீட்டு தரவில்லை. எனவே மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநிவாசா பெருமாள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இரு சக்கர வாகனங்கள் திருட்டை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !