கால்வாய் அடைப்பால் வெளியேறிய கழிவுநீரால் சுகாதாரம் கேள்விக்குறி
ஊத்துக்கோட்டை: பஜார் பகுதியில் கால்வாய் அடைப்பால் வெளியேறிய கழிவுநீரால், சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள பஜார் பகுதியில், ஏராளமான குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. சுற்றியுள்ள கிராம மக்கள், அத்தியாவசிய தேவைக்கு ஊத்துக்கோட்டை வந்து செல்கின்றனர். சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் வாகனங்கள் பஜார் வழியே செல்கின்றன. இங்குள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன், 6.5 லட்சம் ரூபாயில், பஜார், திருவள்ளூர், நாகலாபுரம், சத்தியவேடு சாலைகளில் உள்ள கால்வாய்களில் கழிவுகள் அகற்றப்பட்டன. ஆனால் முழுதுமாக அகற்றாமல், பெயரளவிற்கு பணிகள் நடந்ததால், பஜார் பகுதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறுவது வழக்கமாக உள்ளது. நேற்று காலை, வழக்கம் போல் பஜார் பகுதியில் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கியது. தேங்கிய கழிவுநீரில் பழ வியாபாரிகள், அங்கேயே பழங்களை வைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, ஊத்துக்கோட்டை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.