4 நாட்களாக கழிவுநீர் தேக்கம் தொற்று நோய் பரவும் அபாயம்
திருவாலங்காடு:அம்பேத்கர் நகரில் கழிவுநீர் செல்லும் பாதை அடைக்கப்பட்டதால், கழிவுநீர் நிரம்பி வழிகிறது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.திருவாலங்காடு ஊராட்சி அம்பேத்கர் நகரில், பாரதியார் தெரு மற்றும் இமானுவேல் தெருவில் கழிவுநீர் செல்ல, 20 ஆண்டுகளுக்கு முன் கால்வாய் அமைக்கப்பட்டது.இப்பகுதியில் சேகரமாகும் கழிவுநீர், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான நிலம் வழியாக சென்று, அமரந்தாங்கல் ஏரி அருகே சேகரமாகும் வகையில் அமைக்கப்பட்டது. கடந்த வாரம் ஆலை நிர்வாகத்துக்கு சொந்தமான நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.அப்போது, கால்வாய் சென்ற பாதையும் அடைக்கப்பட்டது. இதனால், கழிவுநீர் செல்ல முடியாமல் மூன்று நாட்களாக கால்வாயில் தேங்கி, சாலையில் நிரம்பி வழிந்து வருகிறது.இதனால், அப்பகுதியில் தொற்று நோய் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் திருவாலங்காடு பி.டி.ஓ.,விடம் புகார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து திருவாலங்காடு ஊரக வளர்ச்சி துறை அதிகாரி கூறியதாவது:சர்க்கரை ஆலை வளாக பகுதி வழியாக, கழிவுநீர் சென்ற பாதை அடைக்கப்பட்டதால், அம்பேத்கர் நகரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக கால்வாயில் தேங்கிய கழிவுநீரை அகற்றி, மாற்று பாதை வழியாக கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.