உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விவசாய நிலங்களில் கிடை போட மீஞ்சூரில் செம்மறி ஆடுகள் முகாம்

விவசாய நிலங்களில் கிடை போட மீஞ்சூரில் செம்மறி ஆடுகள் முகாம்

பொன்னேரி:மீஞ்சூர் ஒன்றியத்தில், சம்பா, சொர்ணவாரி ஆகிய பருவங்களில், 45,000 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது.சம்பா பருவத்திற்கு பின், 10,000 ஏக்கர் பரப்பில் தர்பூசணி, பச்சைப்பயறு மற்றும் காய்கறிகள் பயரிடப்படுகிறது.மாற்றுபயிர் பயிரிடாத விவசாய நிலங்கள் தரிசாக போடப்படுகின்றன. அவற்றை, அடுத்த பருவத்திற்கு தயார்படுத்தும் வகையில், சணப்பை மற்றும் தக்கைப்பூண்டி செடிகளை வளர்த்து மண்ணுடன் சேர்த்து உழுவது, ஆடுகளை அடைத்து வைத்து, அவற்றின் சாணம், சிறுநீரை இயற்கை உரங்களாக பயன்படுத்துவது என விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.இதற்காக ஒவ்வொரு ஆண்டும் விவசாய நிலங்களில் 'கிடை' போடுவதற்காக ஆந்திர மாநிலத்தில் இருந்து, 20,000 செம்மறி ஆடுகள் வரை கொண்டு வரப்படுகின்றன.அவை பகல் நேரத்தில் மேய்ச்சலுக்கு கொண்டு சென்று, இரவு நேரங்களில் விவசாயிகள் குறிப்பிடும் நிலங்களை அடைத்து வைத்து, அவற்றின் கழிவுகள் இயற்கை உரமாக்கப்படுகிறது. தற்போது விவசாய நிலங்களில் ஆடுகளை 'கிடை' போடுவதற்காக ஆந்திர மாநிலம் சித்துார், புத்துார் ஆகிய பகுதிகளில் இருந்து, 15,000 செம்மறி ஆடுகள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு உள்ளன.விவசாய நிலங்களில் ஆடுகளை அடைத்து கிடைபோடுவதற்காக, ஆடு வளர்ப்பவர்கள் ஒரு ஏக்கருக்கு, 1,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:ஆடுகளின் கழிவுகளில் கிடைக்கும் இயற்கை உரமானது பயிர் வளர்ச்சிக்கு தேவையான தழைச்சத்து, மணிசத்து, சாம்பல் சத்து மற்றும் நுண்ணுாட்ட சத்துக்கள் கிடைக்கும் எனவும், பயிர்கள் வளர்ச்சிக்கு துணைபுரிகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ