மழை நின்று ஒரு வாரம் ஆகியும் வௌ்ளம் வடியாத சிவசக்தி நகர்
திருத்தணி:திருத்தணி நந்தி ஆற்றங்கரையோரம் சிவசக்தி நகர் உள்ளது. இங்கு, 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இம்மாதம் இரு முறை பலத்த கனமழை திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் பெய்தது.இதனால், சிவசக்தி நகர் பகுதியில் தெருக்களில் மழைநீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கி நிற்கிறது. ஒரு வாரத்திற்கு முன் பெய்த கனமழையால், சிவசக்தி நகரில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளன.தற்போது, மழை நின்று ஒரு வாரம் ஆகியும் தெருவில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீரில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் செல்கின்றனர்.மேலும், குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரில் இருந்து பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வெளியேறுவது மட்டுமின்றி அவை வீடுகளுக்குள் நுழைவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் சிவசக்தி நகர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும். வடிகால்வாய் வசதி செய்து தர வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.