நுாதன முறையில் குப்பை அகற்றம் குழி தோண்டி புதைப்பதால் அதிர்ச்சி
திருவாலங்காடு:பி.டி.ஓ., அலுவலகம் அருகே பல ஆண்டுகளாக தேங்கியிருந்த குப்பையை தரம் பிரித்து அகற்றாமல், திடீரென பள்ளம் தோண்டி புதைப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஊராட்சியில் சன்னிதி தெரு, பெரிய தெரு, பாஞ்சாலி நகர், பவானி நகர், அம்பேத்கர் நகர் உட்பட 10க்கும் மேற்பட்ட இங்களில், 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில், நான்கு ஆண்டுகளாக சேகரமான குப்பை கழிவு தரம்பிரித்து அகற்றாமல், பி.டி.ஓ., அலுவலகம் அருகே மலைபோல் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. திருவாலங்காடில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படாததே இதற்கு காரணம் என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். மேலும், குப்பையை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். நேற்று காலை திருவாலங்காடு ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் சார்பில், குப்பை கொட்டி வைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகே பொக்லைன் இயந்திரம் மூலம், 20 அடி ஆழம், 10 அடி அகலத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. மூன்றாண்டுகளாக தேங்கியுள்ள குப்பை, அதில் கொட்டி மூடப்பட உள்ளதால், அப்பகுதியில் வசிப்போர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், குப்பை கழிவுகளுடன், இறைச்சி, மருத்துவ கழிவுகள் இருப்பதால், நிலத்தடி நீர் மாசுபட்டு, நோய் பாதிக்கும் அபாயம் உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பள்ளத்தில் குப்பை கழிவை கொட்டி மூடாமல், மாற்று இடத்திற்கு அகற்ற வேண்டும் என, அப்பகுதியில் வசிப்போர் வலியுறுத்தி உள்ளனர்.