திருத்தணி ஒன்றியத்தில் மருத்துவர்கள் பற்றாக்குறை
திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில் பீரகுப்பம், மத்துார், மேல்கசவராஜபேட்டை மற்றும் திருத்தணி நகராட்சி ஆகிய நான்கு இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த சுகாதார நிலையங்களில் தினமும் புறநோயாளிகள், உள்நோயாளிகள், கர்ப்பிணியருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், 5 மருத்துவர்கள், மேல்கசவராஜப்பேட்டை மற்றும் மத்துார் ஆகிய நிலையத்தில் தலா இரண்டு மருத்துவர்கள், திருத்தணி நகர சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவர் மற்றும் மூன்று நடமாடும் வாகனங்களில் தலா ஒரு மருத்துவர் என மொத்தம், 13 மருத்துவர் பணியிடங்கள் உள்ளன.தற்போது நான்கு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மூன்று மருத்துவர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். இதனால், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிப்பதில்லை.மருத்துவருக்கு பதிலாக, செவிலியர்களே நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை மற்றும் ஊசி எழுதி கொடுத்து சிகிச்சை அளிக்கின்றனர். ஏதாவது அவசரம் என்றால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து, 15—20 கி.மீ., துாரத்தில் உள்ள திருத்தணி, அரக்கோணம் மற்றும் சோளிங்கர் ஆகிய இடங்களில் உள்ள வட்டார அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.மேற்கண்ட நான்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரத்தில் எந்த மருத்துவரும் தங்கி பணிபுரிவதில்லை. இதனால் கிராம மக்கள் நள்ளிரவில் உடல்நிலை பாதிக்கப்பட்டால் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு வரவேண்டிய கட்டாயம் உள்ளது.எனவே கலெக்டர் நடவடிக்கை எடுத்து, ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, நோயாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.★★