செங்கரை துணை மின் நிலைய பணி துவங்குவதில்...தாமதம்! : வனத்துறை இழுத்தடிப்பதால் காத்திருக்கும் வாரியம்
திருவள்ளூர்:தேர்வாய்கண்டிகை 'சிப்காட்' தொழிற்பேட்டை மற்றும் சுற்றியுள்ள 20 கிராமத்தினரின் நலனிற்காக, துணை மின் நிலையம் அமைக்க இடம் வாங்கியும், வனத்துறை அனுமதி அளிக்காததால், மின் வாரிய பணிகள் துவங்குவது காலதாமதமாகி வருகிறது. இதனால், தொழிற்பேட்டை மற்றும் கிராம வாசிகள் சீரான மின்சாரம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக, தொழிற்பேட்டைகள் அதிகளவில் உருவாகி வருகின்றன. திருவள்ளூர் அடுத்த, காக்களூர் சிப்காட், கும்மிடிப்பூண்டி, தேர்வாய்கண்டிகை ஆகிய பகுதிகளில் ஏராளமான பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவன தொழிற்சாலைகள் உருவாகி வருகின்றன.இந்த நிறுவனங்களுக்கு சீரான மின் விநியோகம் செய்து தர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், தொழிற்பேட்டைகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்வசதி ஏற்படுத்த துணை மின் நிலையங்கள் அமைக்க தமிழக மின்வாரியம் அனுமதி அளித்து, நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.எல்லாபுரம் ஒன்றியத்தில், தேர்வாய்கண்டிகை 'சிப்காட்' தொழிற்பேட்டையில் ஏராளமான பெரிய நிறுவனங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் உற்பத்தி செய்ய சீரான, தடையில்லா மின்சாரம் அவசியம். அதற்காக, எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் - ஊத்துக்கோட்டை சாலையில் இருந்து, சூளைமேனியில் இருந்து தேர்வாய்கண்டிகை சிப்காட் செல்லும் வழியில், 2 கி.மீ., தொலைவில் உள்ள செங்கரையில், 2021ம் ஆண்டு இடம் தேர்வு செய்யப்பட்டது.வனத்துறைக்கு சொந்தமான 1.38 ஏக்கர் நிலத்தினை, 99 ஆண்டு குத்தகைக்கு பெறப்பட்டது. அந்த இடத்தில், புதிய 11 கி.வாட் துணை மின் நிலையம் அமைக்க, 2022ம் ஆண்டு, தமிழக மின்வாரியம் நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால், இடம் தேர்வு செய்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், மூன்று ஆண்டுகளாக பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.இதுகுறித்து, டி.ஆர்.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் கூறியதாவது:பெரியபாளையம் - ஊத்துக்கோட்டை சாலையில், டி.ஆர்.,குப்பம், தண்டலம், முக்கரம்பாக்கம், வண்ணாங்குப்பம், காக்கவாக்கம் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில், அடிக்கடி குறைந்த மின் அழுத்தம் காரணமாக, சீரான மின்விநியோகம் வருவதில்லை.அடிக்கடி மின்தடை ஏற்பட்டு, வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதடைந்து வருகின்றன. இந்த நிலையில், அருகில் தேர்வாய்கண்டிகையில் புதிதாக 'சிப்காட்' தொழிற்பேட்டை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அங்குள்ள நிறுவனங்களுக்கு மின்சாரம் விநியோகிப்பதால், 20க்குள் மேற்பட்ட கிராமங்களுக்கு அடிக்கடி மின்தடை நிலவி வருகிறது.இதை தவிர்க்கவும், தொழிற்பேட்டைக்கு மின்சாரம் வழங்கவும், மூன்று ஆண்டுக்கு முன் செங்கரையில் 11 கி.வாட் துணை மின் நிலையம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இடம் பெற்று, நிதி ஒதுக்கீடு செய்தும், அப்பணி இன்னும் துவங்காமல் உள்ளது.எனவே, தேர்வாய்கண்டிகை தொழிற்சாலைகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தொடர் மின்சாரம் வழங்க, துணை மின் நிலையம் அமைக்கும் பணியை விரைந்து துவக்க வேண்டும்.இதுகுறித்து மின்வாரிய துறை உயர் அதிகாரிகளுக்கும் மனு அளிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதுகுறித்து திருவள்ளூர் மின்வாரிய அலுவலர் ஒருவர் கூறியதாவது:செங்கரையில் துணை மின் நிலையம் அமைக்க, வனத்துறையிடம், 1.38 ஏக்கர் நிலம் பெற கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. வனத்துறையினர் அனுமதி வழங்காமல் காலதாமதம் செய்து வருகின்றனர். மீண்டும், வனத்துறைக்கு மின்சார தேவை குறித்து, நினைவூட்டல் கடிதம் அனுப்பி உள்ளோம். வனத்துறை அனுமதி கிடைத்ததும், அந்த இடத்தில், 11 கி.வாட் துணை மின் நிலையம் அமைக்கும் பணி துவக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.