கட்டாய கருகலைப்பால் மாணவி பலி நர்ஸ் உட்பட இருவர் சிக்கினர்
திருத்தணி, பொதட்டூர்பேட்டை அருகே நர்சிங் கல்லுாரி மாணவியின் ஐந்து மாத கர்ப்பத்தை கட்டாயமாக கலைத்ததால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக, நர்ஸ் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, தனியார் நர்சிங் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த 5ம் தேதி கல்லுாரி சென்ற மாணவி, இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை என, அவரது பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிந்த போலீசார், இரு நாட்களுக்கு பின் சண்முகபிரியாவை, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் மீட்டனர். இருவரும் காதலித்து வந்ததும், சண்முகபிரியா ஐந்து மாதம் கர்ப்பமாக இருந்ததும் மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது. திருத்தணி மகளிர் போலீசார், சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர், சிறுவன் ஜாமினில் வெளிவந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, மாணவியை அவரது பெற்றோர், கடந்த 13ம் தேதி, ஆந்திர மாநிலம் பண்ணுார் பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கில் நர்ஸாக பணிபுரியும் வய்லெட் காணிக், 52, என்பவரிடம், அழைத்துச் சென்றனர். அங்கு, அவருக்கு கட்டாய கருக்கலைப்பு செய்யப்பட்டது. பின், அங்கிருந்து வீட்டிற்கு வந்தவுடன், 14ம் தேதி மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அவரை, திருத்தணி தனியார் மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர். பின், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருத்தணி மகளிர் போலீசார், கருக்கலைப்பு செய்த வய்லெட் காணிக்கை உள்ளிட்ட இருவரை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.