அரசு கல்லுாரியில் கலை திருவிழா அம்மன் வேடங்களில் மாணவியர்
திருத்தணி:திருத்தணி அரசு கலைக் கல்லுாரியில் நடந்த கலை திருவிழாவில். அம்மன் வேடங்களில் மாணவியர் நடித்து அசத்தினர். திருத்தணி சுப்பிரமணிய சுவாமி அரசினர் கலைக் கல்லுாரியில், இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி பாடப்பிரிவுகளில், 3,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். தமிழக அரசு, பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களின் திறமைகளை வெளியே கொண்டு வரும் வகையில், கலைத் திருவிழா நடத்த வேண்டும் என, உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, கடந்த மாதம் 16ம் தேதி முதல் இன்று வரை அரசு கலைக் கல்லுாரியில் கலை திருவிழா நடக்கிறது. தினமும் மாணவ - மாணவியர் இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று மாணவியருக்கான மாறுவேட போட்டி நடந்தது. இதில் மாணவியர், பல்வேறு அம்மன் வேடமணிந்து, பக்தி பாடல்களுக்கு நடனமாடினர். மேலும், மாணவர்கள் தெருக்கூத்து, பலகுரல் உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ - மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றுகள் வழங்கப்பட உள்ளன.