கணினி அறிவியலில் மாணவர்கள் ஆர்வம் பிளஸ்1ல் குரூப் ஒதுக்கிடுவதில் சிரமம்
திருவாலங்காடு:நடப்பாண்டில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பில் இணைந்து வருகின்றனர்.பொதுவாக கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களை கொண்டது முதல் குரூப்பாக உள்ளது. இதில், ஒரு பாடம் தவிர்த்து வணிக கணிதம் அல்லது கணினி அறிவியல் இடம் பெறும் வகையில் இரண்டாவது குரூப் உள்ளது.மூன்றாவது குரூப்பாக வணிகவியல், கணக்கு பதிவியல், வரலாறு சேர்கிறது. சில பள்ளிகளில் இவற்றுடன் வணிக கணிதம், அரசியல் அறிவியல் பாடம் சேர்க்கப்படுகிறது.கணிதம், அறிவியல் பாடங்கள் இடம்பெற்றுள்ள குரூப்களில் சேர விரும்பும் மாணவர்கள் பலரும், இந்த குரூப்களில் கணினி அறிவியல் ஒரு பாடமாக உள்ளதா என்பதை அறிய விரும்புகின்றனர். பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் குறைவாக இருந்தால், மூன்றாவது குரூப்பில் கணினி பயன்பாடு பாடம் உள்ளதா என தேடுகின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:கடந்தாண்டு தேர்ச்சி விகிதத்தில் சென்டம் எண்ணிக்கையை பார்க்கும், பல மாணவர்கள் எங்களுக்கு கணினி அறிவியல்தான் வேண்டும் என கேட்கின்றனர். ஏ.ஐ., - சாட் ஜி.பி.டி., உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு மீதான தாக்கத்தால் கணினி சார்ந்த பாடங்களை தேடுகின்றனர்; தேர்வு செய்கின்றனர்.இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் அடங்கிய முழுமையான அறிவியல் பாடப்பிரிவில் சேர்வதற்கும் மாணவர்களிடம் ஆர்வம் இல்லை.மொத்தம் 500க்கு, 450க்கு மேல் வாங்கியிருந்தாலும், முதல் தேர்வு கணினி அறிவியல் பாடம் இடம்பெற்ற குரூப்பாக உள்ளது. 'நீட்', ஜே.இ.இ., உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் மூலம், மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்கும்போது வேலைவாய்ப்பு எளிதாகிறது.இருப்பினும், வேலைவாய்ப்பு, சம்பளம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு கணினி சார்ந்த படிப்புகள் உள்ளதா என்பதில் மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இன்னும் சொல்லப்போனால், உயர்கல்வியில் கணினி அறிவியல் அல்லது கணினி பயன்பாடு ஆகியன படிப்பதற்கு இந்தப்பாடங்கள், மேல்நிலைப் பாடப்பிரிவில் இடம்பெற வேண்டும் என்பது கூட கட்டாயம் இல்லை. ஆனால், இதைப் பெற்றோரோ, மாணவர்களோ உணர மறுக்கின்றனர்.வணிகவியல் குரூப் தேர்வு செய்யும்போது, உயர்படிப்பின் போது கணினி சார்ந்த அறிவு இல்லாமல் என்ன செய்வது என யோசித்து கணினி சாரந்த பாடம் இருக்க வேண்டும் என்பதை உறுதிசெய்கின்றனர்.கூடுதல் மதிப்பெண்கள் எடுத்தவர் அல்லது எடுக்காதவர் என மாணவர்கள் அனைவருக்கும், அவர்களுக்கு விருப்பமான குரூப் ஒதுக்கீடு செய்து கொடுப்பது கடினமான பணியாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.