உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  ஒரு வாரமாக சாலையோரம் காத்திருக்கும் கரும்புகள் ஆலை நிர்வாகம் பாராமுகம்; விவசாயிகள் அதிருப்தி

 ஒரு வாரமாக சாலையோரம் காத்திருக்கும் கரும்புகள் ஆலை நிர்வாகம் பாராமுகம்; விவசாயிகள் அதிருப்தி

திருத்தணி: கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்புவதற்காக வெட்டப்பட்ட கரும்புகள் சாலையோரம் வைத்திருந்தும், வாகனங்கள் வராததால் வெயிலில் காய்ந்து, கரும்பின் ஈரப்பதம் குறைந்து வருகிறது. இதனால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். திருவாலங்காடில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு திருத்தணி, அரக்கோணம், திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட ஏழு கரும்பு கோட்ட அலுவலகம் மூலம், விவசாயிகள் கரும்புகளை டிராக்டர் மற்றும் லாரிகளில் அனுப்புகின்றனர். நடப்பாண்டிற்கான கரும்பு அரவை, கடந்த மாதம் துவங்கியது. இந்நிலையில், திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு, நல்லாட்டூர், என்.என்.கண்டிகை, பொன்பாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், ஆலை நிர்வாகத்திடம் கரும்பு வெட்டுவதற்கு முறையாக அனுமதி பெற்று அறுவடை செய்துள்ளனர். மேலும், கரும்புகள் ஏற்றிச் செல்வதற்கு வரும் வாகனங்களுக்கு வசதியாக, சாலையோரம் கரும்பு கட்டுகளை அடுக்கி வைத்துள்ளனர். ஒரு வாரத்திற்கு மேலாகியும், ஆலை நிர்வாகம் வாகனங்களை அனுப்பாமல் அலட்சியம் காட்டி வருகிறது. இதுகுறித்து, கரும்பு விவசாயிகள் கூறியதாவது: கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு அலுவலர் நேரில் பார்வையிட்ட பின், கரும்பு வெட்டுவதற்கு ஒப்புதல் வழங்குகின்றனர். ஆனால், வெட்டிய கரும்புகளை ஆலைக்கு கொண்டு செல்வதற்கு வாகனங்கள் அனுப்புவதில்லை. நாங்களே டிராக்டர், லாரி மற்றும் மாட்டுவண்டி மூலம் கரும்புகளை கொண்டு வருகிறோம். அப்படி இருந்தும், ஆலைக்குள் செல்ல அனுமதி மறுக்கின்றனர். இதனால் வெட்டிய கரும்புகள் வெயிலில் காய்ந்து ஈரப்பதம் குறைவதுடன், சர்க்கரை அளவும் குறைகிறது. எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் ஆய்வு செய்து, வெட்டிய கரும்புகளை ஆலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். அனுமதி கேட்டு கரும்பு வெட்டணும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாக அதிகாரி கூறியதாவது: தற்போது கூட்டுறவு சர்க்கரை ஆலையில், ஒரு நாளைக்கு 2,100 டன் கரும்பு தான் அரவை செய்ய முடியும். அதற்கு ஏற்றவாறு தான், வாகனங்களை தினமும் அனுப்பி, முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளின் கரும்புகள் ஏற்றி வருகிறோம். சில விவசாயிகள் எங்களிடம் தகவல் தெரிவிக்காமல் கரும்புகளை வெட்டிவிட்டு, வாகனங்கள் அனுப்புமாறு வற்புறுத்துகின்றனர். இனிவரும் காலத்தில், எங்களிடம் அனுமதி கேட்டு கரும்பு வெட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை