அதிகாரிகள் முன்னின்று சீரமைத்த கட்டடம் பராமரிப்பு இன்றி பாழ்
பள்ளிப்பட்டு : கலெக்டரின் முகாமிற்காக சீரமைக்கப்பட்ட கட்டடம், பயன்பாடு இன்றி செடி, கொடிகள் வளர்ந்து பாழாகி வருகிறது.பள்ளிப்பட்டு ஒன்றியம் காக்களூரில், கடந்தாண்டுஉங்களை தேடி, உங்கள் ஊரில்' என்ற திட்டத்தின் கீழ், கலெக்டரின் சிறப்பு முகாம் நடந்தது. அப்போதைய கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடந்த இந்த முகாமின் போது, காக்களூரில் உள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்க கட்டடத்தில், கலெக்டர் தங்கி பணிகளை மேற்கொண்டார்.இதற்காக அந்த கட்டடம், அனைத்து துறை அதிகாரிகளின் தலைமையில், இரவு பகலாக துரிதகதியில் சீரமைக்கப்பட்டது. கட்டட வளாகம் புதுப்பிக்கப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டது. புதிய மின் இணைப்பு, குளிர்சாதன வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டன.கட்டடத்தின் முன்பாக கழிவுநீர் தேங்கியிருந்த பள்ளம், மண் கொட்டி சமன் செய்யப்பட்டது. முகாம் முடிந்த பின், மீண்டும் பள்ளம் தோண்டி கழிவுநீர் தேங்கி நிற்க வழி ஏற்படுத்தப்பட்டது. தற்போது, அந்த குட்டையில் கோரைபுற்களும், அகத்தி செடிகளும் வளர்ந்து, தற்போது பயனின்றி கிடக்கிறது. எனவே, புனரமைக்கப்பட்ட கட்டடத்தை மீண்டும் ஊராட்சியின் பொது பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமத்தின் கழிவுநீர் முறையாக வெளியேற்றப்பட வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.