காஸ் கசிவால் தீவிபத்து குடிசை எரிந்து நாசம்
திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் தோமூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மனைவி வள்ளியம்மாள், 55. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்த நிலையில், குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பக்கத்து வீட்டில் வசிக்கும் தன் சகோதரி லட்சுமியுடன் வீட்டின் முன் காஸ் அடுப்பில் வடை சுட்டுக் கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் மேல் பொருத்தப்பட்டிருந்த ரெகுலேட்டர் டியூபில் திடீரென தீ பிடித்தது. இதில் தீ முழுதும் பரவி குடிசை எரிந்தது. வள்ளியம்மாள், லட்சுமி இருவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பகுதிவாசிகள் அளித்த தகவலின்படி வந்த திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமாகின.இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.