மாயமாகி வரும் கால்வாய் மழைநீர் செல்வதில் சிக்கல்
மீஞ்சூர்:ஐந்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக பயணித்து பகிங்ஹாம் கால்வாய்க்கு செல்லும் கால்வாய் பராமரிப்பின்றி, மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மீஞ்சூர் அடுத்த நந்தியபாக்கம் கொள்ளட்டீ, புதுப்பேடு, தமிழ் கொரஞ்சூர், மவுத்தம்பேடு, ஊரணம்பேடு வழியாக கால்வாய் செல்கிறது. மழைக்காலங்களில், மீஞ்சூர், நந்திம்பாக்கம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், இந்த கால்வாய் வழியாக செல்லும். தற்போது, கால்வாய் முழுதும் ஆகாயத்தாமரை சூழ்ந்து, முட்செடிகள் வளர்ந்துள்ளன. மேலும், கரைகள் சேதமடைந்தும், கால்வாயின் குறுக்கே ஆங்காங்கே பாதைகள் அமைக்கப்பட்டும் உள்ளன. இதனால், மழைக் காலங்களில் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற் பட்டுள்ளது. மீஞ்சூர், நந்தியம்பாக்கம் பகுதிகளில் இருந்து வெளியேறும் அதிகப்படியான மழைநீர், கால்வாயில் செல்ல வழியில்லாமல், கிராமங்களை சூழும் அபாயம் உள்ளது. மேலும், பராமரிப்பின்றி இருப்பதால், கால்வாயில் தேங்கும் தண்ணீரை, கிராம மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, கால்வாயை துார்வாரி சீரமைக்க, நீர்வளத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.