எண்ணுார் துறைமுக சாலையில் மின்விளக்கு, பாலம் படுமோசம்
மீஞ்சூர்:எண்ணுார் துறைமுக சாலையில், மின்விளக்குகள் எரியாமலும், பாலங்கள் பராமரிப்பு இன்றியும் இருப்பதால், வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.மீஞ்சூர் அடுத்த வல்லுார் சாலை சந்திப்பில் இருந்து, காட்டுப்பள்ளி வரை எண்ணுார் துறைமுக சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் மின்விளக்குகள் சரிவர பராமரிக்கப்படாமல் உள்ளன. மேலும், கம்பங்கள் சேதமடைந்தும், விளக்குகள் பழுதாகியும் உள்ளன.இரவு நேரங்களில் சாலை இருள்சூழ்ந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதேபோல, இச்சாலையில் வடசென்னை அனல்மின் நிலையம் அருகே உள்ள இரண்டு பாலங்களும் பராமரிப்பு இன்றி உள்ளன.பாலத்தின் இருபுறமும் செடிகள் வளர்ந்தும், தடுப்புச்சுவர்கள் சேதமடைந்தும் உள்ளன. கனரக வாகனங்கள் செல்லும்போது, பாலங்களில் அதிர்வு ஏற்படுகிறது. இது, வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.வடசென்னை அனல்மின் நிலையங்கள், எண்ணுார் காமராஜர் துறைமுகம், அதானி துறைமுகம், கப்பல் கட்டும் தளம், எரிவாயு மற்றும் பெட்ரோலிய முனையங்கள், நிலக்கரி கிடங்கு என, பல்வேறு தொழில் நிறுவனங்கள் இச்சாலையில் அமைந்துள்ளன.இந்நிறுவனங்களுக்கு தொடர் வாகன போக்குவரத்து உள்ள நிலையில், மின்விளக்கு மற்றும் பாலங்கள் பராமரிக்கப்படாமல் இருப்பது, வாகன ஓட்டிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.