உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆரணியாறு கரை பலப்படுத்த ஒதுக்கிய நிதி வீணடிப்பு...: ஏ.என்.குப்பம் அணைக்கட்டில் தண்ணீர் கசிவு

ஆரணியாறு கரை பலப்படுத்த ஒதுக்கிய நிதி வீணடிப்பு...: ஏ.என்.குப்பம் அணைக்கட்டில் தண்ணீர் கசிவு

கும்மிடிப்பூண்டி:ஊத்துக்கோட்டை முதல் பெருவாயல் வரையிலான ஆரணி ஆற்றில், ஆறு மாதங்களுக்கு முன், 23.65 கோடி ரூபாய் செலவில் கரைகள் மற்றும் ஏ.என்.குப்பம் அணைக்கட்டு பலப்படுத்தப்பட்டது. இருப்பினும் தற்போது அணைக்கட்டில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், 2023ம் ஆண்டு வடகிழக்கு பருவ மழை மற்றும் மிக்ஜாம் புயலின் போது, ஆரணி மற்றும் கொற்றலை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு ஏராளமான பாதிப்புக்களை உண்டாக்கியது. மேற்கண்ட இரு ஆறுகள் உட்பட திருவள்ளூர் மாவட்டத்தில், வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் சீரமைப்பு மற்றும் பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள, தமிழக அரசு, 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, கடந்த ஆண்டு பணிகளை துவக்கியது.அதன் ஒரு பகுதியாக, ஊத்துக்கோட்டை முதல் பெருவாயல் வரையிலான, 34.5 கி.மீ., நீள ஆரணி ஆற்றில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக, 23.65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.இடைப்பட்ட பகுதியில், கவரைப்பேட்டை அருகே ஏ.என்.குப்பம் அணைக்கட்டு உள்ளது. அந்த அணைக்கட்டில் பதிக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான கான்கிரீட் கற்கள், 2015ம் ஆண்டு வெள்ளப் பெருக்கின் போது பெயர்ந்தன.அதனால், அணைக்கட்டின் அடிப்பகுதியில் விரிசல் கண்டு தண்ணீர் கசிவு ஏற்பட்டு, மழைநீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அணைக்கட்டு மற்றும் ஒட்டியுள்ள கரை பகுதிகள் பலவீனமான நிலையில் இருந்தன.அதனால், அந்த அணைக்கட்டுக்கு முக்கியத்துவம் அளித்து, சிறப்பு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏ.என்.குப்பம் அணைக்கட்டில் பெயர்ந்த பெரிய அளவு கான்கிரீட் கற்களை முற்றிலும் அகற்றி அதை மீண்டும் பதித்தனர். அணைக்கட்டில் இருந்து தண்ணீர் பாயும் பகுதியில் உள்ள இரு புற கரைகளிலும் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது.அதனுடன், 34.5 கி.மீட்டர் நீள ஆரணி ஆற்றில் கரை உடைப்பு ஏற்பட்ட இடங்களில், தடுப்பு சுவர் அமைத்தும், உயரம் குறைவாக உள்ள இடங்களில் கரையை உயர்த்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து பணிகளும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் முடிந்தன.இந்நிலையில் தற்போது ஏ.என்.குப்பம் அணைக்கட்டில் தண்ணீர் கசிந்து ஓடுகிறது. அணைக்கட்டு சீரமைப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளாததால், மீண்டும் கசிவு ஏற்பட்டு, மழைநீரை தக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அணைக்கட்டின் நீர் வரத்தை நம்பியுள்ள, 20 பாசன ஏரிகளுக்கு கோடை காலத்தில் தண்ணீர் சென்று சேராத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.இது குறித்து, நீர்வளத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ‛அணைக்கட்டில் ஏற்பட்டு வரும் கசிவு உடனடியாக சரி செய்யப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ