உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு கல்லுாரி பிற்படுத்தப்பட்ட விடுதியில் மாணவர்களே சமைத்து சாப்பிடும் அவலம் காப்பாளர், சமையல் எஸ்கேப்

அரசு கல்லுாரி பிற்படுத்தப்பட்ட விடுதியில் மாணவர்களே சமைத்து சாப்பிடும் அவலம் காப்பாளர், சமையல் எஸ்கேப்

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், சத்திரஞ்ஜெயபுரம் பகுதியில், அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில், திருத்தணி வருவாய் கோட்டம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, 120க்கும் மேற்பட்ட மாணவர்கள், திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் கல்வி பயின்றும் விடுதியில் தங்கி வருகின்றனர்.இந்த விடுதியில், ராஜபாண்டியன் என்பவர் காப்பாளராகவும், 2 பேர் சமையல் பணியாளராகவும் வேலை செய்து வருகின்றனர்.சில மாதங்களாகவே காப்பாளர் மற்றும் சமையல் பணியாளர்கள் விடுதிக்கு சரியாக வருவதில்லை என கூறப்படுகிறது.இதனால் மாணவர்களே சமையல் செய்து சாப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில், விடுதியில் உள்ள மாணவர்கள் சமையல் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக நேற்று முதல் பரவி வருகிறது.இது குறித்து மாணவர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:விடுதி காப்பாளர், சமையல் பணியாளர்கள் இரவில் யாரும் விடுதியில் தங்குவதில்லை. இதனால், நாங்களே சமையல் செய்து சாப்பிட்டு வருகிறோம்.சமையல் செய்வதற்கான காய்கறிகள் தரமாக வழங்காமல் அழுகிய நிலையில் வழங்குகின்றனர். இதை சமைத்து சாப்பிடுவதால் எங்களுக்கு வயிற்றுவலி ஏற்படுகிறது திருத்தணி கோட்டத்தில் உள்ள மாணவர்கள் விடுதிகளில் வருவாய் கோட்டாட்சியர் முறையாக ஆய்வு செய்வது இல்லை.இவ்வாறு மாணவர்கள் தரப்பில் கூறுகின்றனர்.எனவே, புதியதாக பொறுப்பேற்ற திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், கல்லூரி மாணவர்களின் விடுதிகளில் நேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளனர்.இது குறித்து திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா கூறியதாவது:திருத்தணி அரசினர் கல்லுாரி மாணவர்கள் தங்கி படிக்கும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை விடுதியில் இருந்து மாணவர்கள் கடந்த மாதம் என்னிடம், விடுதி காப்பாளர், சமையலர் சரியாக வருவதில்லை என்றும், தரமான உணவு வழங்குவதில்லை என, புகார் தெரிவித்தனர்.அதை தொடர்ந்து விடுதியில் ஆய்வு செய்து மாணவர்கள் குற்றச்சாட்டுகள் குறித்து, மாவட்ட பிற்படுத்தப்பட்ட நலத்துறை அதிகாரிக்கு புகாரும் அனுப்பியுள்ளேன். இருப்பினும் இன்று, மாணவர் விடுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி