சுகாதார வளாகம் படுமோசம் 9 ஆண்டாக சீரமைக்காத அவலம்
கொண்டஞ்சேரி:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கொண்டஞ்சேரி ஊராட்சி. இங்குள்ள சுடுகாடு அருகே, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் பயன்பாட்டிற்காக, 20 ஆண்டுகளுக்கு முன் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.இந்த கட்டடம், 2011 - -12ம் ஆண்டு, 1.75 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது. அதன்பின், முறையான பராமரிப்பு இல்லாததால், மகளிர் சுகாதார வளாகத்தை, 2015 முதல் இப்பகுதி பெண்கள் பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும், கடந்த 2017ம் ஆண்டு மகளிர் சுகாதார வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டி சேதமடைந்தது. தற்போது, மகளிர் சுகாதார வளாகம் முழுதும் சேதமடைந்து செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.இந்நிலையில், சேதமடைந்து ஒன்பது ஆண்டுகளாகியும், பலமுறை புகார் அளித்தும் ஒன்றிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் கொண்டஞ்சேரி பகுதியில் ஆய்வு செய்து, மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.