திருடு போகும் சினை மாடுகள் மர்ம கும்பல் தொடர் கைவரிசை
சென்னை:சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், 3,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள், மாடுகளை வளர்த்து வருகின்றன. சிலர் தொழுவம் வைத்து மாடுகளை பராமரிக்கின்றனர்.சிலரிடம் இடவசதி இல்லாததால், ஆங்காங்கே பொது இடங்கள், அரசு கட்டடங்களை சுற்றிய பகுதிகளில் மாடுகளை கட்டுகின்றனர். பல மாடுகள் ஆங்காங்கே சுற்றித் திரிகின்றன.அவ்வாறு சுற்றித் திரியும் மாடுகளை, மர்ம நபர்கள் திருடிச் செல்வதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, நவீன கால்நடை விவசாயிகள் முன்னேற்ற சங்க தலைவர் தங்க.சாந்தகுமார் கூறியதாவது:சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை, மர்ம நபர்கள் திருடி செல்கின்றனர். ஆண்டுதோறும் 1,000 மாடுகள் வரை திருடுபோகின்றன. கடந்த மாதம் மட்டும் 50 மாடுகள் திருடு போயுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை, ஐந்து முதல் எட்டு மாதம் வரையிலான 'சினை' மாடுகள். சினை மாடுகள் அதிக எடை உள்ளதால் திருடி, கசாப்பு கடைகளில் விற்கப்படுகின்றன. பண்டிகை காலங்களில்தான் இந்த திருட்டு அதிகம் நடக்கிறது.கடந்த மாதம் 26ம் தேதி, மாடுகள் திருட்டு குறித்து, திருவேற்காடு காவல் நிலையத்தில், புகார் அளித்தோம். புகார் அளித்த 10 நாட்களில், ஆறு மாடுகள் அடுத்தடுத்து திருடு போனது.எனவே, மாடுகள் திருட்டை போலீசார் தடுக்க வேண்டும்; மாடு திருடும் கும்பலை கைது செய்ய வேண்டும். இல்லையேல், கால்நடை விவசாயிகள் ஒன்று கூடி, காவல் ஆணையர் அலுவலம் முன் முற்றுகை போராட்டம் நடத்தும் சூழல் ஏற்படும்.இவ்வாறு கூறினார்.இதுகுறித்து, ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் கூறியதாவது:திருமுல்லைவாயிலில், மே மாதம், காளை மாடு ஒன்று திருடு போனது. அது தொடர்பான புகாரில், மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். வேறு எந்த புகாரும் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.