கோவிலை சுற்றிவர அமைத்த பாதை வாகனம் நிறுத்தும் இடமான அவலம்
திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.கோவில் அமைந்துள்ள பகுதியில், பொது போக்குவரத்து குறைவு என்பதால், பெரும்பாலான பக்தர்கள் கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருகின்றனர். அவ்வாறு வரும் வாகனங்கள், கோவில் சுற்றுச்சுவரை ஒட்டி, பக்தர்கள் நடந்து செல்ல அமைக்கப்பட்ட கான்கிரீட் கல் பாதை மீது நிறுத்தப்படுகின்றன.அதேபோல, உள்ளூர்வாசிகள் வீடுகட்ட பயன்படுத்தப்படும் ஜல்லிக் கற்கள், எம்.சாண்ட், செங்கல் போன்றவற்றை கான்கிரீட் கல் பாதை மீது கொட்டி வைத்துள்ளனர். இதனால், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட சாலை சேதமடையும் அபாயம் உள்ளதாக பக்தர்கள் புலம்புகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, வாகனங்கள் மற்றும் வீடு கட்டுமான பொருட்களை கொட்டி வைக்காத வகையில், அறிவிப்பு பலகை வைத்து பாதுகாக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.