உயர் மின்அழுத்தத்தால் கடும் அவதி வீட்டு உபயோக பொருட்கள் பழுது பராமரிப்பில் அலட்சியம் காட்டும் மின்வாரியம்
பொன்னேரி:பொன்னேரி அடுத்த திருவேங்கிடபுரம் பகுதிக்கு, பொன்னேரி துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் நடைபெறுகிறது. நேற்று காலை கருமாரியம்மன் கோவில் தெருவில், மரக்கிளைகளுக்கு இடையே இருந்த மின்ஒயர்கள் காற்றில் ஒன்றோடு ஒன்று உரசி, அதிக மின்அழுத்தம் ஏற்பட்டது.இதனால், அப்பகுதியில் உள்ள கருமாரியம்மன் கோவில் தெரு, கோகலே தெரு ஆகிய இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. வீடுகளில் பயன்படுத்திய 'பிரிஜ், வாஷிங்மிஷின், டிவி, மிக்சி, பேன்' உள்ளிட்டவை அதிக மின்அழுத்தம் காரணமாக பழுதாகின.இதனால், குடியிருப்புவாசிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். இச்சம்பவத்திற்கு பின், மின்வாரியத்தினர் அங்கு சென்று, மரக்கிளைகளை அகற்றி, மின்பழுதை சீரமைத்தனர்.மின்வாரியம் பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாததால், அதிக மின்அழுத்தம் ஏற்பட்டு மின்சாதனங்கள் பழுதானதாக அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து குடியிருப்புவாசிகள் கூறியதாவது:இப்பகுதியில் உள்ள தெருக்களில் மின்கம்பிகள் மரக்கிளைகளில் உரசியபடி உள்ளன. இவற்றை முன்கூட்டியே அகற்றி இருந்தால், அதிக மின்அழுத்தம் ஏற்பட்டு, மின்சாதன பொருட்கள் பழுதடைந்து இருக்காது. தற்போது ஏற்பட்ட அதிக மின்அழுத்தம் காரணமாக, ஒவ்வொரு வீட்டிலும், 5,000 - 10,000 ரூபாய் தேவையற்ற செலவினம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு மின்வாரியத்தின் அலட்சியமே காரணம்.மாதந்தோறும், பராமரிப்பு பணிக்காக மின்தடை ஏற்படுத்தும் நிலையில், மரக்கிளைகள் அகற்றப்படாமல் இருக்கின்றன. பணியாளர் பற்றாக்குறையை காரணம் காட்டுகின்றனர்.வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், பெரும் அசம்பாவிதங்களை தவிர்க்க, தேவையான பணியாளர்களை அமர்த்தி, முறையான மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.