உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முறைப்படுத்துவோர் யாருமில்லை; குறைதீர் கூட்டத்தில் கடும் நெரிசல்

முறைப்படுத்துவோர் யாருமில்லை; குறைதீர் கூட்டத்தில் கடும் நெரிசல்

திருவள்ளூர்; திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் யாருமில்லாததால், மனு அளிக்க வந்தோர் கடும் நெரிசலில் சிக்கி தவித்தனர்.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து, மக்களிடம் மனுக்களை பெற்றார்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் பதிவு செய்யும் அறையில் கூடினர். குறைவான எண்ணிக்கை கொண்ட கவுன்டரில், நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து மனுவை பதிவு செய்தனர்.பின், கலெக்டரிடம் மனு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும் கூட்ட அரங்கிற்கு சென்றனர். அங்கு, காவலர் யாரும் இல்லாததால், நுழைவாயில் முன்வரிசையில் நிற்காமல் குவிந்தனர். மனு பெறுவதற்காக, கதவு திறக்கப்பட்டதும், மக்கள் முண்டியடித்து உள்ளே நுழைய முயன்றனர்.அவர்களை கலெக்டர் அலுவலக ஊழியர்கள் தடுத்தும், சிலர் நெரிசலில் சிக்கித் தவித்தனர். ஒரு சிலர், 'தள்ளுமுள்ளு' நடத்தி உள்ளே சென்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் யாரும் இல்லாததால், அமளி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின், கலெக்டர் அலுவலக ஊழியர்கள் கூட்டத்தை சமாளித்தனர்.

672 மனுக்கள் ஏற்பு

திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், நிலம் சம்பந்தமாக 187, சமூக பாதுகாப்பு திட்டம் 153, வேலைவாய்ப்பு கோரி 127, பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 83, இதர துறை 122 என, மொத்தம் 672 மனுக்கள் பெறப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி