உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிப்காட் சாலையில் லாரிகள் நிறுத்தம் பார்க்கிங் வசதி இருந்தும் பயனில்லை

சிப்காட் சாலையில் லாரிகள் நிறுத்தம் பார்க்கிங் வசதி இருந்தும் பயனில்லை

கும்மிடிப்பூண்டி,:கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் 'பார்க்கிங்' வசதி இருந்தும், சாலையோரம் கனரக வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்திற்கு, தினமும் நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. நிர்வாக சிக்கல் காரணமாக, ஒவ்வொரு வாகனங்களாக தொழிற்சாலைக்குள் அனுமதிக்கப்படுகிறது. மீதமுள்ள வாகனங்கள், அந்தந்த தொழிற்சாலை அருகே உள்ள சிப்காட் சாலையோரம் நிறுத்தப்படுகின்றன. இதனால், அவ்வழியாக செல்லும் பிற வாகனங்கள், அப்பகுதியை கடக்க முடியாதபடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன நெருக்கடிக்கு இடையே நடந்து செல்லும் தொழிலாளர்கள், அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், சிப்காட் வளாகத்திற்கு உட்பட்ட மூன்று இடங்களில், 8 கோடி ரூபாய் செலவில், 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு இடத்திலும், 100 கனரக வாகனங்கள் என, மூன்று இடங்களிலும், மொத்தம் 300 வாகனங்கள் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும், பெரும்பாலான கனரக வாகனங்கள் பார்க்கிங் வளாகத்தை தவிர்த்து, சாலையோரம் நிறுத்தப்படுகின்றன. சிப்காட் வளாகத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை பார்க்கிங் வளாகங்களில் நிறுத்த அறிவுறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ