ஆக்கிரமிப்பில் சுடுகாடு சாலை திருப்பந்தியூர் மக்கள் அவதி
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது திருப்பந்தியூர் ஊராட்சி. இங்குள்ள சுடுகாடிற்கு செல்லும் சாலை ஆக்கிரமிப்பில் சிக்கி பயிர் செய்யும் விளைநிலமாக மாறி உள்ளது. இதனால் உடலை கொண்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும், சுடுகாடு பகுதியில் அடிப்படை வசதிகளும் இல்லை. இந்நிலையில், 2019ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் பழனிசாமியின் தனிப்பிரிவிற்கு கொடுத்த புகாரின்படி, 2019 - 20ம் ஆண்டு, 14வது நிதிக்குழு மானியத்தில், 7 லட்சம் ரூபாய் மதிப்பில், 12 அடி அகலம், 210 மீட்டர் நீளத்தில் சாலை பணிகள் நடந்தன. ஆனால், 910 மீட்டர் நீளமுள்ள இந்த சாலையில், 210 மீட்டர் மட்டும் பெயரளவிற்கு நடந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால், இப்பகுதி மக்கள் இறந்தவர்களை வயல் வரப்புகளில் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால், கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம், ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள சுடுகாடு சாலையை மீட்டு சீரமைத்து தரவும், சுடுகாடு பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவும், சுற்றுச்சுவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருப்பந்தியூர் ஊராட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.