திருத்தணி பஸ் நிலையம் அடுத்த மாதம் திறப்பு
திருத்தணி:திருத்தணி -- அரக்கோணம் சாலையில், அரசு போக்குவரத்து பணிமனை அருகே, 4.5 ஏக்கர் பரப்பளவில் 2021- - -22ம் ஆண்டு, 12.74 கோடி ரூபாய் மதிப்பில், நவீன பேருந்து நிலையம் கட்டும் பணிகளை, 2022ம் ஆண்டு அமைச்சர் நேரு துவக்கி வைத்தார்.புதிய பேருந்து நிலைய பணிகளை, கடந்தாண்டே முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்க வேண்டும். நிர்வாக சிக்கல் மற்றும் ஒப்பந்ததாரருக்கு நிதி வழங்குவதில் காலதாமதம் உட்பட பல்வேறு பிரச்னைகளால், புதிய பேருந்து நிலைய பணிகள் எட்டு மாதத்திற்கு மேல் கிடப்பில் போடப்பட்டது.மூன்று மாதங்களுக்கு முன் பணிகள் துவங்கி, தற்போது துரித வேகத்தில் நடந்து வருகிறது. பேருந்து முகப்பு பகுதியில், 2.93 கோடி ரூபாய் மதிப்பில் முருகன் கோவில் கோபுரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும், புதிய பேருந்து நிலையத்தில் தரைத்தளம், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. அடுத்த மாதம் இரண்டாவது வாரத்திற்குள் பணிகள் முழுமையாக முடித்து பயன்பாட்டிற்கு வரும் என, நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.