உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கொத்தடிமையாக இருந்த திருத்தணி தம்பதி மீட்பு

கொத்தடிமையாக இருந்த திருத்தணி தம்பதி மீட்பு

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் இருளர் காலனியில் வசித்து வந்தவர் பீமன் மகன் பழனி,38. இவரது மனைவி தேவயாணி,36. இவர்களை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலம் படனாப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கேசவரெட்டி என்பவர், தன் மாடுகளை பராமரிக்க, மாதம் 10,000 ரூபாய் சம்பளம் தருவதாக கூறி அழைத்து சென்றார்.அங்கு அவரது தோட்டத்தில் ஒரு சிறிய அறையில் பழனி அவரது மனைவியை தங்க வைத்தும், மாடுகள் பராமரிப்பது மற்றும் விவசாய பணிகள் கவனிப்பது என தினமும் அதிகாலை, 3:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை தொடர்ந்து வேலை செய்யுமாறு கொடுமைப்படுத்தியுள்ளார். மாடுகளுக்கு காய்ச்சப்படும் கஞ்சியை சாப்பிட்டு வந்தனர். இவர்கள் கொடுமை தாங்கமுடியாமல் அங்கிருந்து தப்ப முயன்ற போது, கேசவரெட்டி, 'திருட்டு வழக்கில் சிறையில் அடைத்து விடுவேன் என, மிரட்டி வந்தார்.இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதயில் உள்ள ரோப்ஸ் என்ற தன்னார்வலர் தொண்டு நிறுவன மேலாளர் ரமேஷ், அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் விஷ்ணுவர்தன், தலைமை காவலர் ராமசந்திர நாய்க் ஆகியோருடன் நேற்று முன்தினம் கேசவரெட்டி தோட்டத்திற்கு சென்றனர்.அங்கு கொத்தடிமைகளாக இருந்த பழனி, தேவயாணியை மீட்டு திருத்தணி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.திருத்தணி தாசில்தார் மலர்விழி, முதுநிலை வருவாய் ஆய்வாளர் கமல் ஆகியோர் கார்த்திகேயபுரம் இருளர் காலனியில் உள்ள அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி