திருத்தணி முருகன் மலைக்கோவிலில் படித்திருவிழா ஆலோசனை கூட்டம்
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், வரும் 31ம் தேதி படித் திருவிழா, ஜன.1ம் தேதி ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனம் ஆகிய விழாக்கள் நடைபெற உள்ளன. இந்த விழாவிற்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசிப்பர்.இந்நிலையில், நேற்று, மலைக்கோவில் காவடி மண்டபத்தில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு அளிப்பது குறித்து அனைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா தலைமையில் நடந்தது. கோவில் இணை ஆணையர் ரமணி வரவேற்றார்.கூட்டத்தில், திருத்தணி டி.எஸ்.பி., கந்தன், தாசில்தார் மலர்விழி உள்ளிட்ட அனைத்துறை அரசு அதிகாரிகள் பங்கேற்று, படித் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு ஏற்படுத்தபட உள்ள வசதிகள் குறித்து, வருவாய் கோட்டாட்சியரிடம் தெரிவித்தனர்.பாதுகாப்பு பணிக்காக 350 போலீசார், 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி உறுதி செய்யப்படும். கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டன. தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியர் தீபா, படித் திருவிழாவை அனைத்து துறை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என, அறிவுறுத்தினார்.அதை தொடர்ந்து, முருகன் கோவிலின் உபேகோவிலான திருவாலங்காடு வடராண்யேஸ்வரர் கோவிலில், வரும் ஜனவரி மாதம், 12ம் தேதி இரவு ஆருத்ரா அபிஷேகம், 13ம் தேதி ஆருத்ரா தரிசனம் விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.