உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தொழுதாவூர் ரயில்வே கேட் மூடல் 300 ஏக்கர் விவசாயம் பாதிப்பு சுரங்கப்பாதை விரைந்து அமைக்கப்படுமா?

தொழுதாவூர் ரயில்வே கேட் மூடல் 300 ஏக்கர் விவசாயம் பாதிப்பு சுரங்கப்பாதை விரைந்து அமைக்கப்படுமா?

திருவாலங்காடு:தொழுதாவூர் ரயில்வே கேட் மூடப்பட்டதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைந்து சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.சென்னை --- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், திருவள்ளூர் அருகே திருவாலங்காடு ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் வழியாக, தினமும் 400க்கும் மேற்பட்ட புறநகர், எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில்கள் சென்று வருகின்றன.இந்த ரயில் நிலையம் அருகே தொழுதாவூர் கிராமம் உள்ளது. இப்பகுதிவாசிகள் ரயில் தண்டவாளத்தை கடந்து விவசாய நிலங்கள், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது மற்றும் ஓரத்தூர், பேரம்பாக்கம், தக்கோலம் பகுதிகளுக்கு சென்று வந்தனர். மக்கள் பாதுகாப்பாக தண்டவாளத்தை கடக்க ரயில்வே கேட் அமைக்கப்பட்டது.கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த ரயில்வே கேட், கடந்தாண்டு ரயில்வே நிர்வாகத்தால் மூடப்பட்டது. தண்டவாளத்தை கடக்க வசதியாக சுரங்கப்பாதை அமைக்க திட்டமிட்டுள்ளது.ஆனால், தற்போது வரை சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணி நடைபெறவில்லை. இதனால், ரயில்வே கேட் மூடப்பட்டதால், தண்டவாளத்தை கடந்து சென்று, 300க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் நெல் பயிர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள தொழுதாவூர் விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து, தொழுதாவூர் விவசாயிகள் கூறியதாவது:தற்போது சம்பா, நவரை பருவத்தில் பயிர் செய்ய விவசாயிகள் தயாராகும் நிலையில், ரயில்வே கேட் மூடப்பட்டுள்ளதால் டிராக்டர், மாட்டுவண்டியில் உரம் ஏற்றி வருவோர், மணவூர் அல்லது திருவாலங்காடு கேட் வழியாக, 5 கி.மீ., சுற்றிச்செல்லும் அவலம் உள்ளது.விவசாயத்தை நம்பியுள்ள 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன. இதே நிலை தொடர்ந்தால், விவசாயத்தை கைவிடுவது மட்டுமே தீர்வு. 200க்கும் மேற்பட்ட கால்நடைகள் தினமும் தண்டவாளத்தை கடந்து மேய்ச்சலுக்கு செல்கின்றன.மூடிய ரயில்வே கேட்டால், அவை விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. கேட் அடைத்த போது சில மாதங்களில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என, ரயில்வே அதிகாரிகள் கூறினர்.தற்போது, ஓராண்டுக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. பணியும் துவங்கவில்லை. ரயில்வே துறை உயரதிகாரிகள் விரைந்து சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ