ரூ.96.80 லட்சம், 25 சவரன் மோசடி 3 ஆண்டுக்கு பின் மூவர் சிக்கினர்
திருவள்ளூர்:திருவள்ளூர் வி.எம்.நகரைச் சேர்ந்தவர் கீதா, 57. இவரது கணவர் ராமசந்திரன் இறந்து விட்டார். மகன் கிஷோர் பெங்களூரில் பணிபுரிகிறார்.இவர், தன்னை ஏமாற்றியவர்களிடம் இருந்து 96.80 லட்சம் ரூபாய் மற்றும் 25 சவரன் நகையை மீட்டு தர வேண்டும் என, 2022 மே 17ம் தேதி, திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் விபரம்:திருவள்ளூர் அடுத்த திம்மபூபாலபுரம் பகுதியைச் சேர்ந்த ரவிசந்திரன் என்பவர் வாயிலாக, 2021ல் சுரேஷ் மனைவி தேன்மொழி என்பவர் அறிமுகமானார்.தனக்கு அரசு வாயிலாக ஏழை, எளிய மக்களுக்கு ஆடு, கோழி வழங்கும் திட்டத்தில், 1.5 கோடி ரூபாயில் பெரிய ஒப்பந்தம் கிடைத்துள்ளது. கடனாக பணம் தந்து உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன்படி, பல தவணைகளாக 96.80 லட்சம் ரூபாய் மற்றும் 25 சவரன் நகைகளை கொடுத்தேன்.அனைத்து பணத்தையும் ஒரு மாதத்திக்குள் தருவதாக கூறி வந்த தேன்மொழி, 2022 மே 12ம் தேதியில் இருந்து மாயமானார். அவரை அறிமுகப்படுத்தி வைத்த ரவிசந்திரனும் மாயமாகியுள்ளார். நான் கொடுத்த பணத்தை அவர்களிடம் இருந்து மீட்டு தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இதுகுறித்த விசாரணையில், திருவள்ளூர் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரன்ட் உத்தரவின்படி, ஊட்டியில் பதுங்கியிருந்த ரவிசந்திரன், 45, சுரேஷ், 48, தேன்மொழி, 37, ஆகிய மூவரையும், தனிப்படை போலீசார் கைது செய்து, நேற்று காலை திருவள்ளூருக்கு அழைத்து வந்தனர். மூவரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.