தனியார் பஸ் ஓட்டுநரை தாக்கிய மூவர் கைது
பொதட்டூர்பேட்டை:தனியார் நிறுவனத்தின் பேருந்து ஓட்டுநரை கத்தியால் வெட்டியவர்களை போலீசார் கைது செய்தனர். பள்ளிப்பட்டு அடுத்த குமாரராஜபேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணகாந்த், 27. இவர், ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் பாண்டரவேடு கிராமத்தை சேர்ந்த சத்யா என்ற பெண்ணும் வேலை பார்த்து வருகிறார். சத்யாவிடம், கிருஷ்ணகாந்த் நட்புடன் பழகி வந்துள்ளார். சத்யாவிடம் பழகக் கூடாது என, மேல் நெடுங்கல்லை சேர்ந்த பரத்குமார், 20, கிருஷ்ணகாந்தை மிரட்டி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஒரகடத்தில் இருந்து பொதட்டூர்பேட்டை நோக்கி கிருஷ்ணகாந்த் பேருந்தை ஓட்டி வந்துள்ளார். மேல் நெடுங்கல் ஏரிக்கரை அருகே வந்தபோது, பரத்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சாரதி, 18, மற்றும் ஒரு சிறுவன் பேருந்தை வழிமறித்து நிறுத்தி, கிருஷ்ணகாந்தை கத்தியால் வெட்டியுள்ளனர். பேருந்தில் இருந்தவர்கள், கிருஷ்ணகாந்தை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொதட்டூர்பேட்டை போலீசார், மூன்று பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.