ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிய லாரி 15 நாட்களில் மூன்று சம்பவங்கள்
பொன்னேரி:பொன்னேரியில் மீன் ஏற்றிச் சென்ற லாரி, ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கியதால், ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடந்த 15 நாட்களில் மூன்றவாது முறையாக லாரி சிக்கியதால், அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். பொன்னேரி - பழவேற்காடு மாநில நெடுஞ்சாலையில், திருவாயற்பாடி பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. பொன்னேரி - பழவேற்காடு வழித்தடத்தில் உள்ள, 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சுரங்கப்பாதையில், கனரக வாகனங்கள் சிக்கிக் கொள்வதும், அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் தொடர்கிறது. கடந்த மாதம் 24 மற்றும் இம்மாதம் 4ம் தேதிகளில் இருமுறை கனரக வாகனங்கள் சிக்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று மாலை பழவேற்காடில் இருந்து மீன் ஏற்றி வந்த லாரி, சுரங்கப்பாதையில் சிக்கியது. இதனால், இருபுறமும் வாகனங்கள் சுரங்கப்பாதையை கடக்க முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருந்தன. போக்குவரத்து போலீசார் அங்கு சென்று, சுரங்கப்பாதையில் சிக்கிய வாகனத்தை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால், ஒரு மணி நேரத்திற்கு பின் லாரி வெளியேறியது. அதன்பின், மற்ற வாகனங்கள் சுரங்கப்பாதையை கடந்தன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.