கஞ்சா, கத்தி பறிமுதல் ரவுடி உட்பட மூவர் கைது
திருவள்ளூர்: திருவள்ளூரில் , 22 கிலோ கஞ்சா மற்றும் கத்தியை பறிமுதல் செய்த திருவள்ளூர் நகர போலீசார், ரவுடி உட்பட மூன்று பேரை நேற்று கைது செய்து, விசாரிக்கின்றனர். திருவள்ளூர் நகர போலீசார் நேற்று மாலை வீரராகவர் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில், நடந்து வந்த மூன்று பேரிடம் விசாரித்தனர். முடிவில், அவர்கள் கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த ரவுடி அன்பழகன், 40 மற்றும் அவனது கூட்டாளிகள் ராஜ்குமார்,31, சத்யா, 25, என, தெரியவந்தது. அவர்களின் பையில் இருந்த 22 கிலோ கஞ்சா மற்றும் பட்டாக்கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் நகர போலீசார், மூன்று பேரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் நேற்று அடைத்தனர்.