தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து மூன்று பேர் படுகாயம்
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து, மூன்று வடமாநில தொழிலாளர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே ராமசந்திராபுரம் கிராமத்தில், தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு, பழைய இரும்புகளை உருக்கும் கொதிகலன், அழுத்தம் அதிகரிப்பால் வெடித்து சிதறியது. அப்போது, கொதிகலன் அருகே பணியில் இருந்த மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பவன்குமார் யாதவ், 32, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சிக்கந்தர் யாதவ், 45, அக்பர் ஆலம், 31, ஆகிய மூன்று வடமாநில தொழிலாளர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பவன்குமார் யாதவ் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற இருவரும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.