திருவள்ளூர்: திருமழிசை தொழிற்பேட்டையில் சாலை வசதி, மழைநீர் வடிகால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால், 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலை நிர்வாகத்தினர் மற்றும் 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அடிப்படை வசதிகளை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டு ஓராண்டாகியும், அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக, தொழில் துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை தொழிற்பேட்டையில், 300 மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. கடந்த ஆண்டு ஏற்பட்ட 'மிக்ஜாம்' புயலின் போது, 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்குள் தண்ணீர் புகுந்து, இயந்திரங்கள் பழுதாகி உற்பத்தி முடங்கியது. சாலை, கால்வாய்கள் அடித்து செல்லப்பட்டு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும்படி, தொழில் துறையினர் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, 2024 ஜூலை 18ல், அப்போதைய கலெக்டர் பிரபுசங்கர் திருமழிசை சிப்காட் தொழிற்பேட்டையில், பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். மழைநீர் தேங்காதவாறு, கால்வாய்கள் துார்வாரி, சாலைகளை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கலெக்டர் உத்தரவிட்டு ஓராண்டுக்கு மேலாகியும், சிப்காட் பகுதியில் எவ்வித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த ஆகஸ்டில், திருவள்ளூர் மாவட்ட தற்போதைய கலெக்டர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டு சாலை, கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகளை மேற்கொள்ள, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால், கலெக்டர் உத்தரவை காற்றில் பறக்க விட்ட அதிகாரிகள் தொழிற்பேட்டையில் எவ்வித சீரமைப்பு பணிகளையும் மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். கடந்த சில தினங்களாக பெய்த மழையில், சேதமடைந்த சாலையில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி குளம்போல் மாறியுள்ளது. இதனால் தொழிற்சாலைகளுக்கு வரும் வாகனங்கள் மற்றும் பணியாளர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அப்பகுதியில், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
Galleryமேலும், தொழிற்சாலை பகுதியில் பல இடங்களில் கழிவுநீர் கால்வாயில், மின்கம்பங்கள் இருப்பதால், மின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாமல், மின்வாரியத்தினரும் அவதிப்பட்டு வருகின்றனர். கலெக்டர் உத்தரவிட் டும் கால்வாய்கள் துார்வார மற்றும் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ள இப்பகுதியில், தீயணைப்பு நிலையம் இல்லாததும் பெரும் குறையாக உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சிப்காட் பகுதியில் கால்வாய், சாலை போன்ற அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டுமென தொழிற்துறையினர் வலியுறுத்தி உள்ளனர். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், 4.17 கோடி ரூபாய்; சிட்கோ நிதி, 5.90 கோடி ரூபாய் என, மொத்தம் 10.07 கோடி ரூபாயில் கால்வாய் மற்றும் சாலை சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. மழைக்காலம் துவங்கி விட்டதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மழை முடிந்து, விரைவில் சீரமைப்பு பணிகள் துரிதப்படுத்தப்படும். - வெண்மணி செல்வன், கிளை மேலாளர், சிட்கோ, திருமழிசை தொடருது அவதி திருமழிசை சிட்கோ உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது: திருமழிசை சிப்காட்டில் சாலை, மழைநீர் கால்வாய் இல்லாமல், பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறோம். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உயரமாகிவிட்டதால், சிப்காட்டிலிருந்து கழிவுநீர் வெளியேறுவதில், ஐந்தாண்டுகளாக பிரச்னை உள்ளது. அருகிலுள்ள குடியிருப்புகளில் இருந்தும், சிப்காட் கால்வாய் வழியே கழிவுநீர் செல்வதால் சிரமப்பட்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.