ரூ.12.74 கோடியில் கட்டப்படும் திருத்தணி பஸ் நிலைய பணி இழுபறி
திருத்தணி:திருத்தணி நகராட்சியில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க, அரசு போக்குவரத்து பணிமனை அருகே, 12.74 கோடி ரூபாயில் கட்டடப்பட்டும் வரும் புதிய பேருந்து நிலையப் பணிகள் ஒரு வருடமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சி அலுவலகம் பின்புறம் அண்ணா பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில், 25 முதல் 35 பேருந்துகள் மட்டுமே நிற்பதற்கு வசதியுள்ளதால், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகளும் செய்து தரமுடியாத நிலை உள்ளது.இதையடுத்து திருத்தணி நகராட்சி நிர்வாகம் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு, அரக்கோணம் சாலை திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை அருகே, 4.60 ஏக்கர் பரப்பில் கட்டுவதற்கு தீர்மானித்து மாவட்ட நிர்வாகத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்து தருமாறு கோரிக்கை வைத்தது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் நகராட்சி நிர்வாகம் பெயருக்கு நிலம் மாற்றப்பட்டது. தொடர்ந்து, கடந்த 2022ம் ஆண்டு, அமைச்சர் நேரு, 12.74 கோடி ரூபாயில் புதிய நவீன பேருந்து நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நட்டு பணியை துவக்கி வைத்தார்.இப்பணிகள் துரித வேகத்தில் நடந்து வந்த நிலையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில், 70 சதவீதம் முடிந்த நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. நிதி ஒதுக்கீடு இல்லாததால் பணிகள் காலதாமதம் ஆவதாக கூறப்படுகிறது.எனவே, புதிய பேருந்து நிலைய பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.