சாலை வசதிக்கு ஏங்கும் திருவள்ளூர் பாரதி நகர்
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 13வது வார்டு பாரதி நகரில், சாலை வசதி இல்லாமல் குடியிருப்புவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், மண் சாலைகள் அனைத்தும், தார் மற்றும் சிமென்ட் சாலையாக மாற்றும் பணியில், நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.இந்த நிலையில், நகராட்சிக்கு உட்பட்ட 13வது வார்டு பகுதியில், பாரதி நகர், ஏ.ஆர்.கே.நகர், கனகவள்ளி தாயார் அவென்யூ மற்றும் 12வது வார்டு திருமலை நகர் பகுதியில் சாலை வசதி இல்லை.இதனால், குண்டும், குழியுமான சாலையில் மழை காலத்தில் தண்ணீர் தேங்கி குளமாக காட்சியளிக்கிறது. பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பதிக்க சாலை தோண்டப்பட்டதால், குண்டும் குழியுமாக மாறியதாக, வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.மழைக்காலங்களில் இந்த சாலைகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, இப்பகுதியில் தரமான சாலை அமைத்து தரவேண்டும் என, குடியிருப்புவாசிகள் நகராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.