திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், ஒன்பது வட்டங்கள் உள்ளன. முதல் கட்டமாக, இரண்டு வட்டங்களில் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மீதமுள்ள ஏழு வட்டங்களின் இணையத்தில் பதிவேற்றப்பட்ட விபரங்கள் சரிபார்ப்பு பணியில், நில அளவை துறை ஈடுபட்டுள்ளது. இப்பணி முடிந்ததும், முழு அளவில் அமலுக்கு வரும் என, வருவாய் துறையினர் தெரிவித்தனர்.தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரி திட்ட துறை www.tnlandsurvey.tn.gov.inஎன்ற இணையதளத்தை, 'NIC' மூலம் உருவாக்கியுள்ளது. இதில், பட்டா மாறுதல், தமிழ்நிலம் மொபைல் செயலி இணைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி மற்றும் ஆவடி ஆகிய ஒன்பது வட்டங்கள் உள்ளன. இந்த வட்டங்களுக்கு உட்பட்ட அரசு புறம்போக்கு, ரயத்வாரி உள்ளிட்ட விபரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.இதன்படி, 2000ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட பட்டா, நில வரைபட விபரங்கள், 'தமிழ் நிலம்' மென்பொருள் தொகுப்பு வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே, இதை பார்வையிட முடியும். அத்துடன், பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கும், இணையதளத்திலேயே விண்ணப்பிக்கலாம்.தற்போது, கிராம நத்தம் நிலங்களின் பட்டா விபரங்கள், தமிழ் நிலம் தகவல் தொகுப்பில் சேர்க்கப்பட்டு வருகின்றன. பரீட்சார்த்தமாக, கடந்த சில மாதங்களுக்கு ஆர்.கே.பேட்டை வட்டம் மற்றும் திருத்தணி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட, கிராம நத்தம் பட்டா விபரங்கள் அனைத்தும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. தற்போது, இந்த பகுதிகளில் கிராம நத்தம் பட்டா மனுக்கள் அனைத்தும், இணையதளம் வாயிலாக பெறப்பட்டு, பட்டா வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 15 நாட்களுக்கு முன், பள்ளிப்பட்டு தாலுகாவிலும், கிராம நத்தம் நிலங்களின் விபரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, நடைமுறைக்கு வந்துள்ளது.மீதமுள்ள, ஏழு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளின் கிராம நத்தம் நிலங்களின் விபரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அதை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில், தற்போது ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு தாலுகா மற்றும் திருத்தணி நகராட்சி ஆகிய பகுதிகளில், கிராம நத்தம் பட்டா, இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பெறப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.ஊத்துக்கோட்டை, திருத்தணி, ஆவடி, கும்மிடிப்பூண்டி மற்றும் பூந்தமல்லி ஆகிய ஆறு தாலுகாவிற்கு உட்பட்ட கிராம நத்தம் நில விபரங்கள், இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரி திட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அவர்கள், இதை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஊத்துக்கோட்டை மற்றும் பூந்தமல்லி ஆகிய தாலுகாவில், இன்னும் ஒரு வாரத்திற்குள்ளும், மற்ற தாலுகா விபரங்கள், இம்மாத இறுதிக்குள்ளும் சரிபார்க்கும் பணி நிறைவு பெற்று, நடைமுறைக்கு வந்துவிடும்.திருவள்ளூர் மற்றும் பொன்னேரி ஆகிய தாலுகாக்களில், அதிகளவில் கிராம நத்தம் நிலங்கள் உள்ளதால், இதன் விபரங்களும் விரைவில் சரிபார்க்கப்பட்டு, அடுத்த மாதத்திற்குள் நடைமுறைக்கு வரும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.இதுவரை, பட்டா மாறுதல் மற்றும் புதிய பட்டா பெற, கிராம நிர்வாக அலுவலர் முதல் தாசில்தார் வரை நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.தற்போது, இந்த நிலை மாறி, வீட்டில் இருந்தபடியே இணையதளத்தில் விண்ணப்பித்து, அவற்றை பெற முடியும். இதனால், பொதுமக்களுக்கு வீண் அலைச்சல், தரகர் செலவு உள்ளிட்டவை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.