உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தொடர் உயிரிழப்புகளால் சுற்றுலாப் பயணியருக்கு கிடுக்கிப்பிடி: பழவேற்காடு கடலில் குளிக்க தடை விதித்து கண்காணிப்பு

தொடர் உயிரிழப்புகளால் சுற்றுலாப் பயணியருக்கு கிடுக்கிப்பிடி: பழவேற்காடு கடலில் குளிக்க தடை விதித்து கண்காணிப்பு

பழவேற்காடு:பழவேற்காடில், 16 நாட்களில், இரண்டு மீனவர் உட்பட ஆறு பேர் கடலில் மூழ்கி உயிரிழந்ததை தொடர்ந்து, நேற்று காணும் பொங்கல் நாளில் குவிந்த சுற்றுலாப் பயணியர் கடலில் குளிக்க, படகு சவாரி செய்ய தடைவிதித்த போலீசார், கிடுக்கிப்பிடி போடும் வகையில் கண்காணித்தனர்.திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவப் பகுதி வங்காள விரிகுடா கடற்கரை பகுதியை ஓட்டி அமைந்து உள்ளது. புத்தாண்டு, காணும் பொங்கல் நாட்களில் இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணியர் குவிவர்.சென்னை மெரினா போன்று அழகிய கடற்கரை அமைந்து உள்ளதால், குடும்பத்தினருடன் இங்கு வந்து பொழுதை கழிப்பர். கடல் அலைகளில் குளித்து விளையாடி மகிழ்வர்.நேற்று காணும் பொங்கல் தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணியர் பழவேற்காடில் குவிந்தனர். கடந்த, 1ம் தேதி, புத்தாண்டு தினத்தில் இருந்து, நேற்று முன்தினம் வரை கடலில் குளிக்க சென்று, அலையில் சிக்கி, நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், மீன்பிடிக்க சென்று கரை திரும்பும்போது, படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், வைரவன்குப்பத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் அலையில் அடித்து செல்லப்பட்டு இறந்தனர். கடந்த 16 நாட்களில் பழவேற்காடு பகுதியில், கடல் அலையில் சிக்கி, ஆறு பேர் உயிரிழந்த சம்பவங்கள் நடைபெற்று உள்ளன.காணும் பொங்கல் நாளில் அசம்பாவிதங்களை தவிர்க்க, பல்வேறு துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். எண்ணுார் உதவி கமிஷனர் வீரகுமார் தலைமையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் கடற்கரை, கலங்கரை விளக்கம், பழவேற்காடு ஏரி உயர்மட்ட பாலம், மீன் இறங்குதளம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.பொன்னேரி வருவாய் மற்றும் மீன்வளத் துறையினரும் கடற்கரை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.பழவேற்காடு பகுதியில் இயங்கும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் ஒன்றிணைந்து, 'பழவேற்காடு செயல்பாட்டு கூட்டமைப்பு' என்ற பெயரில், 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் சுற்றுலாப் பயணியரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.கடற்கரை பகுதி முழுதும், ஆங்காங்கே போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, சுற்றுலாப் பயணியரை கடலில் இறங்கி குளிக்க வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டனர்.மீறுபவர்கள் அங்கிருந்து விரட்டி அனுப்பப்பட்டனர். பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில், தீயணைப்பு வீரர்களும், பாதுகாப்பு உபகரணங்களுடன் கடற்கரை பகுதியில் வலம் வந்தனர்.காவல்துறையினர் ஒலிப்பெருக்கி வாயிலாக, 'கடல் சீற்றம் அதிகமாக இருக்கிறது. ஆபத்தான அலையில் குளிக்க வேண்டாம்' என, சுற்றுலாப் பயணியரை எச்சரித்தபடி இருந்தனர். ஆங்காங்கே எச்சரிக்கை வாசகங்களும் வைக்கப்பட்டிருந்தன.மருத்துவ குழுவினருடன் அவசர ஊர்திகள் கடற்கரை பகுதியில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.கடந்த, 2011ல் பழவேற்காடு ஏரியில் படகு சவாரி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த, 22 பேர் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தனர். இதனால் ஏரியில் படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டது.அதை மீறி படகு சவாரி நடைபெற்றை தொடர்ந்து, 'சுற்றுலாப் பயணிரை படகு சவாரி அழைத்து செல்லக்கூடாது, மீறினால் சட்ட நடவடிக்கை பாயும்' என, மீனவ கிராமங்களுக்கு, திருப்பாலைவனம் போலீசார் சுற்றறிக்கை வாயிலாக எச்சரிக்கை செய்திருந்தனர்.படகு சவாரியை தடுக்கும் வகையில், ஏரிப்பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சுற்றுலாப் பயணியர் வருகையை ஒட்டி, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், மீனவர்கள் தொழிலுக்கு செல்வதை தவிர்த்திருந்தனர். இதனால் மீனவர்களின் படகுகள் ஏரிக்கரைகளில் ஓய்வெடுத்தன. எப்போதும் பரபரப்பாக இருக்கும் மீன் இறங்குதளம் பரபரப்பின்றி, வெறிச்சோடி கிடந்தது.அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார், பழவேற்காடு கடற்கரை பகுதிகளில் சுற்றுலாப் பயணியருக்கு கிடுக்கிப்பிடி போட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.இதுகுறித்து, காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:சுற்றுலாப் பயணியரின் பாதுகாப்பு கருதி, கடலில் குளிக்கவும், படகு சவாரி செய்யவும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணிகளில், 200 போலீசார் ஈடுபட்டு உள்ளனர். மீனவர்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு தந்துள்ளனர். தொடர்ந்து விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பழவேற்காடு பகுதி கண்காணிக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பூண்டியில் குவிந்த சுற்றுலா பயணியர்

ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்களில் பூண்டி கிராமத்தில் உள்ள சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கம் முக்கியமானது. இதன் கொள்ளளவு, 3.23 டி.எம்.சி., நீர்மட்டம், 35 அடி. சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.மழைநீர் மற்றும் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர் ஆகியவற்றால் முழுவதும் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. பூண்டி கிராமத்தில் நீர்த்தேக்கம் தவிர, அருங்காட்சியகம், பூங்காக்கள் ஆகியவை உள்ளன.நேற்று, காணும் பொங்கலையொட்டி, சென்னை, திருவள்ளூர், செங்கற்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் தண்ணீர் நிறைந்து காணப்படும் பூண்டி நீர்த்தேக்கத்தை கண்டு களித்தனர். பூண்டி ஊராட்சியில் பொதுமக்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். பொதுமக்களின் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை