உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மீஞ்சூரில் கடைகளை மறைத்து அரசியல் கட்சிகளின் பேனர்கள் வியாபாரிகள் அதிருப்தி

மீஞ்சூரில் கடைகளை மறைத்து அரசியல் கட்சிகளின் பேனர்கள் வியாபாரிகள் அதிருப்தி

மீஞ்சூர்:மீஞ்சூர் பஜார் பகுதியில், மளிகை, காய்கறி, நகை, ஜவுளி என, 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மீஞ்சூரை சுற்றியுள்ள, 100க்கும் மேற்பட்ட கிராமங்களின் முக்கிய வியாபார மையமாக இது இருக்கிறது. இந்நிலையில், பஜார் பகுதியில் உள்ள கடைகளை மறைத்து அவ்வப்போது, அரசியல் கட்சியினர் தலைவர்களின் பிறந்தநாள் வாழ்த்து, பொதுகூட்டம் என, பல்வேறு நிகழ்வுகளுக்காக விளம்பர பேனர்கள் வைக்கின்றனர்.இதனால் வியாபாரிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். நேற்றும், அ.தி.மு.க., சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கம் கூட்டத்திற்கு பஜார் பகுதி முழுதும், 50க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.இது வியாபாரிகளுக்கும், கடைக்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்களுக்கும் பெரும் இடையூறாக இருந்தது. பேரூராட்சி மற்றும் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்து நடவடிக்கை இல்லாததால் வியாபாரிகள் அதிருப்தி அடைந்தனர்.மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள் பொதுநலச்சங்கத்தின் செயலர் டி.ஷேக் அகமது கூறியதாவது:நீதிமன்ற உத்தரவை மீறி எந்தவொரு அனுமதியும் இன்றி, மீஞ்சூர் பஜார் பகுதியில், அரசியல் கட்சியினர் விளம்பர பேனர்களை வைத்து வியாபாரிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்துகின்றனர். வாடிக்கையாளர்கள் வரமுடியாத அளவிற்கு கடைகளை மறைத்து பேனர்கள் வைப்பதால், வருவாய் இழப்பு ஏற்படுகிறது.நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் நடைமுறைபடுத்துவதில்லை. குறிப்பாக, அரசியல் கட்சியினர் விளம்பர பேனர்களை அகற்றுவதில் தயக்கம் காட்டுகின்றனர்.வியாபாரிகள் தொடர்ந்து அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனின்றி கிடக்கிறது. பேனர்களால், பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் அசம்பாவிதங்களில் சிக்கும் அபாயமும் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், அடுத்தகட்டமாக நீதிமன்றத்தில் முறையிடவும், போராட்டங்களை முன்னெடுக்கவும் உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ