| ADDED : நவ 18, 2025 03:26 AM
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல் ஏற்படுகிறது. சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது ஊத்துக்கோட்டை பேரூராட்சி. இங்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மக்கள் அத்தியாவசியத் தேவைக்கு ஊத்துக்கோட்டை சென்று வருகின்றனர். இங்குள்ள பஜார் பகுதியில் வியாபாரிகள் சாலையில் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது மட்டுமின்றி, ஆட்டோ, கார், வேன், மினி லாரி உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுவதால், நெரிசல் ஏற்படுகிறது. இதேபோல், தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் ஆம்புலன்ஸ் நெரிசலில் சிக்குகின்றன. ஊத்துக்கோட்டை போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர். எனவே, பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையில் நிறுத்தும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.