டி.என்.பி.எஸ்.சி., தேர்வு மைய பொறுப்பாளர்களுக்கு பயிற்சி
திருத்தணி:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக, அடுத்த மாதம் 12ம் தேதி குரூப் - 4 தேர்வு நடைபெற உள்ளது. திருத்தணி வருவாய்கோட்டத்தில், 31 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை திருத்தணி கோட்ட வருவாய் துறையினர் செய்து வருகின்றனர். நேற்று திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்வு மைய பொறுப்பாளர்களுக்கு பயிற்சி கூட்டம் நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி தலைமை வகித்தார்.இதில், டி.என்.பி.எஸ்.சி., பிரிவு அலுவலர் கதிரேசன் பங்கேற்று பேசியதாவது:ஜூலை 12ம் தேதி நடைபெறும் குரூப் - 4 தேர்வில், திருத்தணி கோட்டத்தில், 12,000 பேர் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வில் கொடுக்கப்படும் 'ஓ.எம்.ஆர்., சீட்'டில் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.குறிப்பாக, தேர்வு எண், எட்டில் இருந்து நான்கு இலக்க எண்களாக குறைக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்வு விதிமுறைகள் சுருக்கமாக கொடுக்கப்படும். தேர்வு எழுதுவோர், காலை 8:00 - 9:00 மணி வரை மட்டுமே தேர்வு அறையில் அனுமதிக்க வேண்டும் உட்பட பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.எனவே, தேர்வு மைய பொறுப்பாளர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.