சொரக்காய்பேட்டையில் மின்மாற்றி கம்பம் சேதம்
பள்ளிப்பட்டு, செப். 29--பள்ளிப்பட்டு ஒன்றியம், சொரக்காய்பேட்டை கிராமத்தில், 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் விசைத்தறி நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.விசைத்தறி மற்றும் விவசாய பாசனத்திற்காக கிராமத்தில் மின்வினியோகம் செய்ய மின்மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளன. இதில், கிராமத்தின் கிழக்கில், கீழப்பபூடி செல்லும் சாலையில் உள்ள மின்மாற்றியின் வாயிலாக 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்வினியோகம் நடக்கிறது.இந்நிலையில், இந்த மின்மாற்றி பொருத்தப்பட்டுள்ள மின்கம்பங்கள் உருக்குலைந்து கிடக்கின்றன. எந்த நேரத்திலும் உடைந்து விழ நேரிடலாம். இதனால், பகுதிவாசிகள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.பெரும் விபரீதம் ஏதும் ஏற்படும் முன், இந்த மின்மாற்றியின் கம்பங்களை மாற்றி புதிதாக நிறுவ வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.