10 கிலோ கஞ்சாவுடன் சுற்றிய இருவர் கைது
சோழவரம்:செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவின், தனிப்படை போலீசார் போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று எண்ணுார், மீஞ்சூர், அத்திப்பட்டு, மணலி, செங்குன்றம் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை தடுப்பதற்கான தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.சோழவரம் அடுத்த மொண்டியம்மன் நகரில், சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த இருவரை பிடித்து, அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர்.அதில், இருவரது பைகளிலும், தலா, 5 கிலோ என, 3.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.விசாரணையில் அவர்கள், விருதுநகர் மாவட்டம், கீரையார்புரம் பகுதியை சேர்ந்த சங்கர், 25, நந்தகுமார், 23, என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது.போலீசார் இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.