பயணியை கத்தியால் குத்தி வழிப்பறி செய்த இருவர் கைது
மீஞ்சூர்:துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராபின்சன், 31. இவர், கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.அதே பகுதியில் வீடு வாடகை எடுத்து தங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு, சொந்த வேலையாக அத்திப்பட்டு சென்றார்.பின், அங்கிருந்து நண்பர் ஒருவருடன், சென்னை வேளச்சேரி செல்வதற்காக அத்திப்பட்டு ரயில் நிலைய நடைமேடையில் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த இரு வாலிபர்கள், ராபின்சன்னிடம் கத்தியை காட்டி மிரட்டி மொபைல்போனை பறித்தனர். தடுக்க முயன்ற ராபின்சன்னை, கத்தியால் கையை கிழித்துவிட்டு அங்கிருந்து தப்பினர்.காயமடைந்த ராபின்சன், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து ராபின்சன், கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த அஜய், 28, அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், 28, ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது.இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.