தாய் கண்டித்ததால் விபரீத முடிவு விஷம் குடித்து இரு மகன்கள் இறப்பு
கடம்பத்துார்:தாய் கண்டித்ததில் விஷம் குடித்த சகோதரர்கள் இருவர் உயிரிழந்தனர். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் ஒன்றியம் கம்மவார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன், 52, மனைவி ஜெயலட்சுமி, 49. தம்பதிக்கு விக்னேஷ், 26, கணேஷ், 24 என, இரு மகன்கள் உள்ளனர். ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்த கணேஷ் தன்னுடன் பணிபுரியும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இது குறித்து தாய் ஜெயலட்சுமிக்கு தெரிய வரவே கணேஷை கண்டித்துள்ளார். எனவே அடிக்கடி வீட்டில் தகராறு நடந்து வந்துள்ளது. இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் கடந்த 27ம் தேதி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளனர். தாய் ஜெயலட்சுமி இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் இருவரும் வயலுக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தனர். பெற்றோர், இருவரையும் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக இருவரையும் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 29ம் தேதி கணேஷ் உயிரிழந்தார். விக்னேஷ் நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.